தீபாவளிக்கு நாள்கள் நெருங்க, நெருங்க மக்களின் கூட்டம் அதிகரிக்கக் கூடும் இதனைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்ட முயற்சிப்பார்கள்.
தீபாவளி ஷாப்பிங்கிற்கு வரும் மக்கள் நகைகள், பணத்தை திருடர்களிடம் பறிகொடுக்காமல் இருக்க காவல் துறை புது வியூகத்தை வகுத்துள்ளது.
திருடர்களைக் கண்டுபிடிக்க காவல் துறை பயன்படுத்தும் பேஸ்டேகர் செயலி தொழில்நுட்பத்தைப் பெரிய கடைகளுக்கு வழங்க காவல் துறை முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் நபர்களை கண்டால் உடனடியாக செல்போனில் உள்ள அந்த செயலியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால், குற்றச்செயல் புரிபவர்களை அடையாளம் காண முடியும்.
கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உள்ளே நுழைய ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியையும் தி. நகர் காவல் துறை செயல்படுத்தியுள்ளது.
பெண்களிடம் செயின் பறிப்புகள் நடைபெறாமல் தடுப்பதற்கு, கழுத்தில் அணியும் வகையில் நகை பாதுகாப்புத் துணியை காவல் துறையினர் வழங்குகின்றனர். ரங்கநாதன் தெருவில் நுழையும்போது காவல் துறையினர் நகைகளை அணிந்து செல்லும் பெண்களுக்கு இதை இலவசமாக வழங்கிவருகின்றனர்.
காவல்துறை வகுத்த புதிய வியூகம் எட்டு காவல் துறையினர் பாடி காமிராவை அணிந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி ஆணையர் தலைமையில் நாள்தோறும் 30 ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
சனி, ஞாயிறு, தீபாவளி தினத்திற்கு முன்னதாக இரண்டு நாள்கள் 500 காவல் துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் பாதுகாப்பால் தைரியமாக நகைகளை அணிந்து கடைவீதிகளுக்குச் செல்ல முடிவதாகப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் எழுத்தறிவின்றி 1.24 கோடி பேர்: 3.10 லட்சம் பேருக்கு கல்வி அளிக்க திட்டம்