சென்னை:47வது சர்வதேச புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு, ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கங்கள்: தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் மற்றும் எல்எல்பி ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்கங்களும் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2,000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
குகை வாசிகள்: சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கபட்டுள்ள, ‘குகை வாசிகள்’ என்ற அரங்கம், இளையான் குடியான் மடல் முழுவதும் இஸ்லாமிய மதம் சார்ந்த நூல்களைக் கொண்டுள்ளது. இந்த அரங்கில் புது வித முயற்சியாக "வாங்காவிட்டாலும் பராவியில்லை கால் வலித்தால் உட்காருங்கள்" என்ற பதாகை, மக்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. இது குறித்து, பதிப்பகத்தின் நிர்வாகிகளை கேட்டபோது, "இங்கு வரும் வாசகர்கள் அனைவரும் நீண்ட நேரம் நடப்பதால், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.