வங்கி கார்டு பழையதாகி விட்டதா? புதிதாக மாற்றுவதற்காக ஏடிஎம் கார்டு விவரம், செல்போன் டவரை வீட்டின் மாடியில் அமைத்தால் பெரும்தொகை உள்ளிட்ட பாணியில் மோசடியில் விவரம் தெரியாத பொது மக்களை ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது. இந்த வகையில் பல மக்கள் ஏமாந்து பணத்தை இழந்து விட்டதாக புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது புதிய பாணியில் வாட்ஸப்பில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தங்கக்கட்டிகளை விற்றுத் தந்தால், அதற்கு தகுந்தார்போல் கமிஷன் தருவதாக ஏமாற்றும் முயற்சியில் வட மாநில கும்பல் இறங்கியுள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு நேற்று இரவு புது எண்ணில் இருந்து ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் ஒருவர் இந்தியில் பேசியதால் அலைபேசியைத் துண்டித்துள்ளார்.
பின்னர் வாட்ஸ் ஆப்பில் சுரேஷ் அலைபேசி எண்ணிற்கு ராகுல் ஷர்மா என்பவர், நான் ராஜஸ்தானில் இருக்கிறேன். என்னிடம் 20 கிலோ தங்க கட்டிகள் இருக்கிறது. நான் ஏழை, அதனால் எனக்கு உதவுங்கள். இதை விற்றுத் தந்தால் 40 சதவீதம் கமிஷன் தருவதாக வாட்ஸ் ஆப்-இல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ், சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட தண்டையார்பேட்டை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அவருக்கு வந்த மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரும்பாலான மக்கள் இந்த வடமாநில கும்பலின் பணத்தாசை மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:சொத்து தகராறு; மகனை சுத்தியால் அடித்து கொன்ற தந்தை!