சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித்தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக காண்காணிக்கிறது.
மேலும், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்புகள்
மேலும், பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிகம் உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது.
சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வறை நுழைவுச்சீட்டில் அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு தேதி
2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரையிலும், காலை மற்றும் மாலை நேரத்திலும் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தேர்விற்கான விதிமுறைகள்
பாலிடெக்னிக் தேர்வுக் கட்டுப்பாடு வழிமுறைகள், தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவை இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்படும், நேரடியாக வழங்கப்படாது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு நுழைவுச்சீட்டில், தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளளன.
அதில், தேர்வர்களுக்கான தேர்வு மையம், மாவட்டம் போன்றவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைப்படி குலுக்கல் முறையில் நடைபெறும்.
தேர்வு மைய நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு, நுழைவுச் சீட்டின் பிரதியுடன் தேர்வர்கள் செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்.
தேர்வறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள்
மேலும், ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
காலை தேர்வுக்கு 7.30, பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மையத்திற்கு முன்பு காவல் துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தேர்வர்களை சாேதனைச் செய்த பின்னர் அனுப்புவார்கள். தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதானப்பொருள்கள், கைபேசி, மைக்ரோ போன், கால்குலேட்டர், மடிக்கணினி, பேஜர், டிஜிட்டல் டைரி போன்ற மின்சாதனப் பொருள்களும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
தேர்வு மையத்தில் பொருள்களை வைத்தால் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது.
தேர்வர்களுக்கு தரப்படும் பொருள்கள்
தேர்வு அறையில் தேர்வர்களுக்கு விடைகளை போட்டுப் பார்பதற்கு தேவையான தாள்கள், பேனா, பென்சில் அளிக்கப்படும். தேர்வு முடிந்தப் பின்னர் விடைகளை போட்டுப் பார்த்த தாளை தேர்வு அறையின் கண்காணிப்பாளரிடம் மீண்டும் திருப்பி தந்துவிட்டு வர வேண்டும்.
மதிப்பெண் முறை
பாலிடெக்னிக் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். 190 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கேட்கப்படும். பகுதி 1இல் 110 கேள்விகள். தலா 1 மதிப்பெண் வீதம் 110 மதிப்பெண்களுக்கும், பகுதி 2இல் 40 கேள்விகள் தலா 2 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
தேர்வர்கள் தவறான விடைகளை அளித்தால் அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படாது. தேர்வு அறையில் அமைதி கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வேறு நபர்களுக்கு அனுமதி கிடையாது.
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், துறையின் மூலம வரும் காலத்திலும் தேர்வெழுத முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வு அறைக்குள் நுழையும் போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதுடன், கைகளை கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்யவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.