இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் செயல்பாட்டில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவிற்கு ஏற்ப இத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்கள் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் ஒன்றானது கீழ்காணும் அறிவிப்பு:
இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை, குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்துசமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுகின்றன. மேலும் திருக்கோயில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள், இதர வைபவங்கள் குறித்தும் பக்தர்களும், பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
கோரிக்கையை எப்படி பதிவிடுவது?
திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள், பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்தவற்கு ஏதுவாக, 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் புதிய திட்டம் அறநிலையத் துறையின் இணையதளமான hrce.tn.gov.in-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், பக்தர்கள் "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் திட்டத்தினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.