சென்னை: குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளைத் திறம்பட நடத்துதல் மற்றும் அரசு குற்றவியல் வழக்கு நடத்துனர்களின் பணித்திறனை கண்காணித்தல் போன்றவற்றின் மீது முழுக்கட்டுப்பாடு செலுத்தும் இயக்ககம்.
சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிக்கும் இயக்குநரகம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககங்களுக்கு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர் சாலையில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில் 87,091 சதுர அடி பரப்பளவில் 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்தூக்கிகள் போன்றவைகளும், குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்கக கட்டிடத்தில் முதல் தளத்தில் இயக்குநர் அறை, பார்வையாளர் அறை, கலந்துரையாடல் அறை, அலுவலகப் பிரிவு, எழுத்துமனு பிரிவு, தகவல் அறியும் சட்டப் பிரிவு, கணினி அறை, பதிவக அறை போன்றவைகள் அமைக்கப்படவுள்ளன.