தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம் வெளியீடு! - New Education policy

புதிய கல்விக் கொள்கையின் படி உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம் வெளியீடு!
உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம் வெளியீடு!

By

Published : Dec 13, 2022, 5:20 PM IST

உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேட்டி

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பிலும் 4 ஆண்டுகள் பாடத்திட்டத்தை பல்கலைக் கழக மானியக்குழு அறிமுகம் செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020இன் படி, 4 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கான பரிந்துரையை வழங்கியது, பல்கலைக் கழக மானியக்குழு. குறிப்பாக, வரைவு பாடத்திட்டம் வகுப்பதற்கான பரிந்துரையில் இதுகுறித்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஸ்குமார் வெளியிட்டுள்ள வரைவுப் பாடத்திட்டத்தில், பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் படி வரையறுக்க வேண்டியவை குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை வரையறை செய்வதுடன் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் பாடத்திற்கான கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் புதிய கல்விக் கொள்கையின்படி உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் (National curriculum framework) உயர் கல்விக்கான தேசிய புதிய பாடத்திட்டம், தேசிய புதிய கல்வி வரைவுத்திட்டத்தின் பட உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல்முறையாக கலை அறிவியல் 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படிக்கின்றபோதே பாதியில் வெளியேறி மீண்டும் உயர் கல்வி தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்புடன், நான்காண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 4ஆம் ஆண்டு ஹானர்ஸ் மற்றும் 4 ஆண்டு ஆராய்ச்சிப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய முறையின் படி,

  • முதலாம் ஆண்டில் வெளியேறினால் 40 கிரெடிட் புள்ளிகள் பெற்றுள்ள பட்சத்தில் இளநிலை சான்றிதழ் பட்டம் வழங்கப்படும்.
  • 2ஆம் ஆண்டில் வெளியேறினால் 80 கிரெடிட் புள்ளிகளுடன் டிப்ளமோ சான்றிதழ் பட்டம் வழங்கப்படும்.
  • 3ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடிக்க 120 கிரெடிட் புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
  • 3ஆம் ஆண்டு பட்டபடிப்பிற்குப் பிறகு 4ஆம் ஆண்டு ஹானர்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், 160 கிரெடிட் புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • 4ஆம் ஆண்டு ஹானர்ஸ் மற்றும் ஆராய்சிப் பட்டப்படிப்பில் சேர்ந்திட இளநிலை 3ஆம் ஆண்டில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.

மேலும் மைனர் டிகிரி மற்றும் மேஜர் டிகிரி என்கிற இரு பட்டங்கள் பெறுகின்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பாடத்திட்டத்துடன் வேறு ஏதேனும் துறையில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவை பயின்று பிரதான பட்டப்படிப்புக்கான பட்டத்துடன் மைனர் டிகிரி என்கிற பட்டத்தையும் பெற முடியும்.

நான்கு ஆண்டுகள் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டாலும், மூன்று ஆண்டுகள் நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தில் புதிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பல்கலைக் கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. தேசிய புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கல்வி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறையினை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் முடிவாக உள்ளது. தொடர்ந்து இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “பல்கலைக்கழக மானியக்குழு, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்ட வரைவை கொண்டு வந்துள்ளனர்.

4ஆம் ஆண்டு பட்டப் படிப்பு கொண்டு வந்திருப்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், இதனை செயல்படுத்தும்போதுதான் அதில் உள்ள பல்வேறு சவால்கள் தெரிய வரும். தனியார், சுயநிதி கல்வி நிறுவனங்கள் இதனை செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு பாடப்பிரிவில் இருந்து வேறு பாடத்தை தேர்வு செய்யலாம். ஒரு கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு மாற முடியும். இந்தியாவில் செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருக்கும். ஒரு பிரிவில் படிக்கும் மாணவர்கள் மற்றொரு பிரிவுக்கு வரும்போது, போதுமான அளவிற்கு இடம், ஆசிரியர்கள் இருப்பதிலும் சிரமம் இருக்கும்.

மாணவர்கள் பாதியிலேயே வெளியேறுவதற்கு வாய்ப்பு அளிக்கும்போது, அதற்கான நிபந்தனைகளைக் கொண்டு வர வேண்டும். இந்த பாடத்திட்ட முறையை குறித்து பெற்றோர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் ஓராண்டு கழித்து கொண்டு வரலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநர் கல்லூரி மாணவர்களிடம் அரசியல் பேசுகிறார்: கடுகடுத்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details