தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக 202.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம், வாகனம் நிறுத்தம், உணவகக் கட்டடம் மற்றும் பொது கழிப்பிடம் போன்ற கூடுதல் வசதிகளுடன் 5.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஆண்டுதோறும் சட்டக் கல்வி பயில்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வியினை வழங்கிட புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக தலா 3 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் வீதம், மொத்தம் 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் செலவில், 2019-2020 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக, ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்.