சென்னை:சென்னை விமான நிலையம் ரூ.2,400 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதி நவீன ஒருங்கிணைந்த விமான நிலையங்களாக உருவாகி வருகிறது. இந்தப் பணி 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதன் முதல் ஃபேஸ் கட்டிடங்கள் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் நிலங்கள் கையகப்படுத்துவது தரையில் பாறைகள் இருந்தது மற்றும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வந்தன.
இந்த நிலை தற்போது முதல் ஃபேஸ் கட்டிடப் பணி நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அந்த கட்டிடத்தில் நவீன கருவிகள் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டிடம் 5 தளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பேஸ்மெண்ட் பயணிகளின் உடமைகளை கையாளுதல் பகுதியாவும், தரைதளத்தில் சர்வதேச விமான பயணிகள் வருகை பகுதியாகவும், இரண்டாவது தளத்தில் புறப்பாடு பயணிகள் பகுதியாகவும் அமைக்கப்படுகின்றன. மற்ற தளங்களில் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறைகள், வணிக வளாகங்கள், மற்றும் அலுவலக பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கட்டிடத்தில் பேஸ்மெண்ட் பகுதியில் பயணிகளின் உடைமைகளை கையாளும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று முதல் வரும் பத்தாம் தேதி வரை சோதனை அடிப்படையில் பயணிகளின் உடைமைகள் அங்கு கையாளப்படும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "தற்போது கட்டி முடிக்கப்பட்ட முதல் பேஸில் அதி நவீன கருவிகளில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்படும்போது தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள் போன்ற பொருட்கள் இருக்குமேயானால், தானியங்கி முறையில், சர்ச்சைக்குரிய அந்த உடமையை தனியே தள்ளி வைக்கும் முறை இந்த நவீன கருவிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக முதற்கட்டமாக இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம் என்ற மூன்று இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் பரிசோதனை நடப்பதால் பயணிகளின் உடைமை தாமதம் இன்றி துரிதமாக விமானத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அதி நவீன சிஸ்டம் படி பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கும் போது பயணிகள் அந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. பயணிகள் காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்து வீடியோ மூலம் தங்களுடைய உடமைகள் பரிசோதனையை கண்காணிக்கலாம்.