தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தோருக்கு மார்ச்.19ல் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு! - அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுதுபவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

New
New

By

Published : Mar 17, 2023, 10:38 PM IST

சென்னை: இந்தியாவில் கல்வி கற்காமல் உள்ளவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவை கற்பிப்பதற்காக வயது வந்தோர் கல்வித் திட்டம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் மாலை நேரங்களில் வீடுகளின் திண்ணைகளில் வயதானவர்கள் அமர வைக்கப்பட்டு, படித்தவர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. சில ஊர்களில் மின்சார தெரு விளக்கிலும் அமர வைத்து படிக்க வைத்தனர். அனைவருக்கும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதற்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னார்வலர்களை கொண்டு தற்போது கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தில் பயின்று வரும் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் குப்புசாமி இன்று(மார்ச்.17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள 5.20 லட்சம் கற்போர்கள் பயனடையும் வகையில் 28 ஆயிரத்து 848 கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் சுற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மார்ச் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இத்திட்டத்தின் கற்போர் அனைவருக்கும் அவரவர் சார்ந்த கற்போர் மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அரசின் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் பதிவு செய்து பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டக் கற்போர் மையங்கள், வட்டார வளமையம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு எழுதவுள்ளவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "வாழ்வில் எப்போதும் தொடரக்கூடிய நிலையான செல்வம் கல்வி மட்டுமே. அந்த நிலையான செல்வமாகிய கல்வியைப் பெறுவது நமது உரிமையும், கடமையும் ஆகும். இந்த எழுத்தறிவுத் திட்டத்தில் சேர்ந்து அடிப்படை கல்வியைப் பெற முயற்சிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

உங்கள் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில் நீங்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் பெற்று உங்கள் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் உங்கள் பள்ளிகளை பார்வையிடுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details