சென்னை:கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இன்று ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியை ஏற்றுக் கொண்டார். புதிய ஆளுநர் ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "இந்தியா தமிழர் நாகரிகம் பண்பாட்டிற்கு பெயர் போனது. மிகவும் பழமையான கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப் பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிக்கிறது.
தமிழ்நாடு மக்களுக்கு என்னால் முடிந்த நன்மைகளைச் செய்வேன். என்னுடைய முழு ஒத்துழைப்பு தருவேன். சட்டப்படி நான் நடப்பேன். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு சேவை செய்வேன். பழமையான மொழியான தமிழ் மொழியை நான் கற்க விரும்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பேன்- தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி செய்தியாளர்கள்:தமிழ்நாடு ஆளுநர் பதவி தங்களுக்கு சவாலானதாக இருக்குமா?
ஆளுநர்:இந்தப் புதிய ஆளுநர் பதவி என்பது எனக்கு சவாலானதாக இருக்கும் என்பதைத் தாண்டி எனக்கு கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
செய்தியாளர்கள்:பன்வாரிலால் புரோகித் போல நீங்களும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வீர்களா?
ஆளுநர்:நான் ஆளுநராக பதவி ஏற்று சில நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக செயல்படுவதற்கு என சில சட்ட திட்ட விதிகள் உள்ளன. அதற்கு உட்பட்டு செயல்படுவேன். இந்த விதிகளுக்கு உட்பட்டு என்னால் முடிந்ததை மக்களுக்கு செய்வேன்.
செய்தியாளர்கள்:தமிழ்நாடு அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
ஆளுநர்:கரோனா தொற்று தமிழ்நாட்டில் பெருமளவில் குறைந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது என நம்புகிறேன்.
செய்தியாளர்கள்:தமிழ்நாடு ஆளுநராக நீங்கள் பதவியேற்றுள்ளதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?
ஆளுநர்:அரசுக்கும் எனக்குமான உறவு என்பது தற்போதுவரை எதுவும் எழுதப்படாத புதிய பலகை போல உள்ளது. வரும் நாட்களில் இந்த உறவு மேலும் அழகாகும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
செய்தியாளர்கள்:கரோனா தடுப்பு ஊசி பெற்றுத் தருதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் பாலமாக செயல்படுவீர்களா?
ஆளுநர்:கரோனா விவகாரத்தை பொறுத்தவரை கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் செயல்பட வேண்டும். கரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி