சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, வி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சென்னை - தியாகராய நகர் பிரகாசம் தெருவில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெறி, அசுரன், கபாலி உள்ளிட்டப் பல திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
அடுத்ததாக வி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம், வாடிவாசல். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கிறார்.
இந்த நிலையில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை எனக்கூறி பல லட்சங்களை மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்நிலையில் வி கிரியேசன்ஸ் பெயரை பயன்படுத்தி, சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜகதீசன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க:Actor Dhanush : மீண்டும் பாலிவுட் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்! யார் கூட தெரியுமா?
அதில் வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெற்றி மாறன் இயக்க, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் என்ற புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும், அந்தப் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை எனவும்; ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.