தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானங்கள் தாமதமின்றி நடைமேடைக்கு வர புதிய கருவிகள்.. சென்னை விமான நிலையத்தில் நவீன வசதி! - டாக்ஸி வே

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் ஓடு பாதையில் ஓடி அது நிற்க வேண்டிய இடத்தில் வந்து நிற்பதற்கு தரைதள ஊழியர்கள் உதவி இல்லாமல் நேரடியாக வருவதற்காக அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

New equipment installed at Chennai airport to ensure that flights reach the Bay without delay
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம் இன்றி நடைமேடைக்கு வர புதிய கருவிகள்

By

Published : Jun 1, 2023, 8:02 PM IST

சென்னை: விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துவதற்கான Bay எனப்படும் நடைமேடைகள் சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவைகள் உள்ளன. இவைகளில் தற்போது 95 நடைமேடைகள் விமானங்கள் வந்து நின்று செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் ஓடி அதன்பின்பு டாக்ஸி வே எனப்படும் இணைப்பு சாலைக்கு வந்து அதன் பின்பு அது நிற்க வேண்டிய நடைமேடையில் வந்து நிற்கும்.

விமானங்கள் அவ்வாறு நடைமேடைக்கு வந்து நிற்பதற்கு சென்னை விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் எனப்படும் தரைதள ஊழியர்கள் தங்கள் கைகளில் சிக்னல் பலகைகளை வைத்துக்கொண்டு சைகைகளை காட்டுவார்கள். விமானத்தில் உள்ள விமானிகள் அந்த சைகைகளை பார்த்து அதற்குத் தகுந்தபடி விமானத்தைக் கொண்டு வந்து நிறுத்தி வந்தனர்.

ஆனால் கடுமையான சூறைக்காற்று, மழை காலங்கள், போன்ற மோசமான வானிலை நிலவும் போது தரைதள ஊழியர்கள் கைகளால் காட்டும் சைகைகளை விமானிகள் பார்த்து விமானங்களை சரியாக கொண்டு வந்து நிறுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து மேலை நாடுகளில் உள்ளது போல் (அட்வான்ஸ் விசுவல் டோக்கிங் கெய்ட்நஸ் சிஸ்டம்) எனப்படும் நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகளை சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி தற்போது முதற்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் 50 நவீன தானியங்கி வழிகாட்டுதல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அந்த கருவிகள் செயல்பாடுகள் பற்றி சோதனைகள் நடந்தன. சோதனை முறை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இன்று காலை முதல் இந்த கருவிகள் சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

விமானங்கள் டாக்ஸி வே-யில் இருந்து விமானங்கள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு திரும்பும் போது 60 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த நவீன தானியங்கி வழிகாட்டும் கருவி செயல்பட தொடங்கும். விமானம் நேர்கோட்டில் சரியானபடி நடைமேடைக்கு வருவதை அந்த தானியங்கி கருவி உறுதி செய்யும்.

விமானம் நேர்கோட்டில் இருந்து விலகி, வலது அல்லது இடது புறம் திரும்பினால் அந்த கருவியில் அமைக்கப்பட்டுள்ள திரையில் டிஜிட்டல் முறையில் அம்புக்குறி இட்டு வழி காட்டப்படும். விமானி அதை கவனித்து விமானத்தை இயக்குவார். விமானம் சரியாக நிறுத்தும் இடத்திற்கு வந்ததும் அந்த கருவியின் திரையில் ஸ்டாப் என எழுத்துக்களுடன் கூடிய சிவப்பு விளக்கு எரியும். அதை பார்த்து விமானி விமானத்தை நிறுத்தி விடுவார்.

இந்த நவீன முறை இன்றிலிருந்து சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இனிமேல் மோசமான வானிலை, பலத்த மழை, சூறைக்காற்று போன்ற நேரங்களிலும் விமானங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அது நிற்க வேண்டிய நடைமேடையை சென்றடையும். அதோடு அடுத்த கட்டமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள மற்ற நடைமேடைகளுக்கும் இந்த அதிநவீன கருவிகள் பொருத்தப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Seeman Twitter Account: சீமான் ட்விட்டர் முடக்கம்.. முதலமைச்சர் கண்டனமும் காவல் துறையின் விளக்கமும்!

ABOUT THE AUTHOR

...view details