தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்து 1,500 பேர் கொண்ட குழு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான திட்டப்பணிகளை மேற்கொண்டு இந்த புதிய பாடத்திட்டங்களை உருவாக்கியது.
புதிய கல்விக் கொள்கையால் பாடத்திட்டத்தில் மாற்றமா? - பாடத்திட்டத்தில் மாற்றம்
சென்னை: புதிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பாடத்திட்டம் மாற்றப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்காக சுமார் 400 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் இந்த ஆண்டு முழுமையாக அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மீண்டும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மீண்டும் தமிழ்நாட்டில் பாடத்திட்டம் மாற்றப்படுமா? என்ற கேள்வியுடன் அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், '2006ஆம் ஆண்டுக்குப் பின் 13 ஆண்டுகள் கழித்து மத்திய கல்வி பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் எழுதி, பாடப்புத்தகங்களை உருவாக்கி அமலுக்கு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். இதன் பின்னர் மத்திய அரசின் பாடப்புத்தகங்களைப் பார்த்து, தேவையான சிறு, சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்படும். மேலும் தேசிய கல்விக் குழுமத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருக்காது. இதனால், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தற்போதுள்ள பாடத்திட்டங்களில் எந்த பெரிய மாற்றங்களும் வராது' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.