ஒடிசா மாநிலத்தில் பிறந்த ஜே.கே. திரிபாதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் படிப்பில் பட்டம் பெற்றவர். 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.
தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள இவர், டிஐஜி-ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் சென்னை தெற்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகத்துறை ஐ.ஜி ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் தெற்கு மண்டல ஐ.ஜி, ஆயுதப்படை, குற்றம், பொருளாதாரக் குற்றம், காவல் தலைமையகம், அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவையாற்றினார். மேலும், கூடுதல் டிஜிபி ஆக சிறைத்துறையில் பணியாற்றியுள்ள திரிபாதி, இரண்டு முறை சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சட்டம் - ஒழுங்கு, அமலாக்கத்துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (ஏடிஜிபி) பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது இவர் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். திரிபாதி திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, பொதுமக்கள் - காவல்துறைக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பீட் ஆஃபீசர் முறை, புகார் பெட்டித் திட்டம், சேரி தத்தெடுப்பு முறை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதேபோல், சிறைத்துறையில் இருந்தபோதும், மகாத்மா காந்தி சமூகக் கல்லூரியை அனைத்து சிறைகளிலும் நடைமுறைப்படுத்தினார்.