சென்னை:தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகியப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டாவை சீரழிக்கும் இந்த புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து தமிழக டெல்டா பகுதிகளை நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஒரு தீவிரமான பிரச்னை. நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2005, கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் 7வது பாகம் ஏலத்தை மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் கடந்த மார்ச் 29ஆம் தேதி அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில், மைக்கேல்பட்டி - கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை. இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.