சென்னை இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையத்தை சென்னை ஐஐடியின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை தொடங்கியுள்ளது. இந்த மையத்தின் மூலம் , இந்தியாவில் கணிதம் மற்றும் வானியல், கட்டிடக்கலை பொறியியல், வாஸ்து மற்றும் சிற்பக்கலை, இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, இந்திய அழகியல் மற்றும் இலக்கண மரபுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த மையத்திற்கான நிதியுதவியை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் அதன் இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவு வழங்கி வருகிறது.
இந்த மையத்தினை இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே திறந்து வைத்து பேசும்போது, அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை, மொழியியல், கலைகள், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகிற்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அந்த கண்டுபிடிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐசிசிஆர் தலைமை இயக்குநர் குமார் துஹின், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க சென்னை ஐஐடியின் இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.