தமிழ்நாடு

tamil nadu

லியோ படத்திற்கு அதிநவீன கேமரா வரவழைப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

By

Published : Jun 21, 2023, 3:08 PM IST

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்காக ‘KOMODO X’ என்ற புதிய ரக கேமரா வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த கேமராவை சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு, ஓபன் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்திற்காக புதிய ரக கேமரா வரவழைப்பு
லியோ படத்திற்காக புதிய ரக கேமரா வரவழைப்பு

லியோ படத்திற்காக புதிய ரக கேமரா வரவழைப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.‌

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியிடப்பட்ட இப்பாடலின்‌ புரொமோவில் இப்பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று போடப்பட்டு உள்ளது.

மேலும் இந்தப் படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு லியோ‌ படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வருமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “இது மிகப் பெரிய ஆக்சன் படமாக இருக்கும்” என்றார்.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்காகவே ‘KOMODO X’ என்ற கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் இந்தியாவில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘லியோ’ தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா சுமார் 7 லட்சம். இந்த கேமராவின் மூலம் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டால் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என படக்குழு கூறுகிறது.

இதுவரை ஹாலிவுட் படத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட இந்த கேமரா தற்போது முதல் முறையாக ஒரு இந்திய படத்தில், அதிலும் தமிழ் படத்தில் பயன்படுத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கேமரா மூலம் இரவு நேர காட்சிகளைக் கூட அற்புதமாக படம் பிடிக்க முடியும்.‌ மேலும் எடை குறைவாக இருப்பதால் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். இந்த கேமரா லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது.

இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கேமரா இறக்குமதி செய்யப்பட்டதை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு இருவரும் இந்த கேமராவை ஓபன் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிக லைக்குகளைப் பெற்று வருகிறது. மேலும், இந்த கேமராவில் பதிவு செய்த காட்சிகளை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர்.

இதையும் படிங்க:Karan Deol: திருமண புகைப்படங்களை வெளியிட்ட கரண் தியோல்!

ABOUT THE AUTHOR

...view details