தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து காவலர்களை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் - chennai

போக்குவரத்து காவல்துறையினர் பணிக்கு சரியான நேரத்திற்கு வருகின்றனரா, எந்த நேரத்தில் எங்கு பணியில் இருக்கிறார்கள் போன்றவற்றை கண்காணிக்க சென்னை போக்குவரத்து காவல் துறை புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

போக்குவரத்து காவலர்களை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்
போக்குவரத்து காவலர்களை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

By

Published : Aug 31, 2022, 11:03 AM IST

சென்னை:போக்குவரத்து விதிமீறல்களை தடுத்து விபத்துக்களை குறைக்க சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு புதிய நடைமுறைகளை காலத்திற்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதலில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் பணமில்லா பரிவர்த்தனை என்ற டிஜிட்டல் முறை சென்னை காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதத்தை செலுத்தாமல் வசூலிக்க வேண்டிய அபராதத் தொகை அளவு அதிகரித்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அழைப்பு மையங்கள் முறை நடைமுறைக்கு வந்தது. அதன்படி விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் பட்டியலை வைத்து அவர்களை தொடர்புகொண்டு அபராதத்தை செலுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக பே டீஎம் (Paytm) நிறுவனத்துடன் இணைந்து கியூஆர் கோட் (QR Code) முறையை கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம் செய்து அதன் மூலம் அபராதத் தொகை தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்ட பணி நேரத்திற்கு வருவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

போக்குவரத்து போலீசார் இல்லாததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளே தாமாக முன்வந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதன் அடிப்படையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தலைமையில் இப்புகார்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்நிலையில், போக்குவரத்து காவல் துறையினர் பணிக்கு சரியான நேரத்திற்கு வருகின்றனரா, எந்த நேரத்தில் எங்கு பணியில் இருக்கிறார்கள், போன்றவற்றை கண்காணிக்க சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்த செயலியை சென்னையில் உள்ள 309 சிக்னல் சந்திப்புகளில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து காவல் துறையினரின் செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்ய வைத்து, போக்குவரத்து போலீசாரின் வருகை பதிவேடு, பணி விவரம், பணி நேரம் போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் எனவும் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், "சுபாஹு இ-பீட்ஸ்" என்ற செயலி தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை 3 ஆண்டு காலத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

விரைவில் இந்த செயலி முறை அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து போக்குவரத்து காவல்துறையினரும் சரியாக பணியாற்றுகின்றனரா என கண்காணிக்கப்படுவார்கள் எனவும் ஆண்டிராய்ட் செயலி இல்லாத போக்குவரத்து போலீசார் மிகச் சொற்பமே என்பதால் அவர்களுக்கு மாற்று பணி ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூடுதல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் துறை தூங்குகிறதா.. வார்டு உறுப்பினர் ஜீவன் கேள்வி..

ABOUT THE AUTHOR

...view details