பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் எழுதவும் படிக்கவும் தெரியாவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் கற்கும் பாரதம் திட்டத்தின் மூலம் ஒன்பது மாவட்டங்களில் 25 லட்சத்து 39 ஆயிரம் கல்லாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடியே 24 லட்சம் பேர் முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021க்குள் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் நோக்கத்திற்காக ’கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டின் அடிப்படையில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோரின் விவரங்களை அருகே உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரின் உதவியுடன் பெற வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் பதிவேடுகள், மகளிர் சுய உதவிக் குழு சார்ந்த பதிவேடுகள் மூலமும் கல்லாதோரின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையங்களாக செயல்படும். ஒவ்வொரு முயற்சிக்கும் குறைந்தபட்சம் 20 மற்றும் அதற்கு அதிகமான எண்ணிக்கையில் படிக்காதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.