மருத்துவர் சௌந்தரராஜன் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும்போது முதல் மாணவராகத் தேர்ச்சிப்பெற்று பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.டி. படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் கையால் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கணவரான, மருத்துவர் சௌந்தரராஜன் படிக்கும்போது மட்டுமின்றி பணியிலும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறார். அப்படி மருத்துவர் சௌந்தரராஜன் சிறுநீரக மருத்துவத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர். இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முதலில் சிறுநீரகத் துறையை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்தினார். அரசுத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு 20 ஆண்டுகள் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத் துறையை ஆரம்பித்து, 20 ஆண்டுகள் அங்கு சிறுநீரகத் துறை தலைவராகப் பணியாற்றினார்.
அங்கே முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மூளை மரணம் ஏற்பட்டவர்களுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே இரண்டாவதாகச் செய்தார்.
அதுமட்டுமின்றி எய்ட்ஸ் நோயாளிக்கு இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெருமையும், உலகத்திலேயே முதன்முறையாக பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரகத்தை எடுத்து வெற்றிகரமாகப் பயன்படுத்திய பெருமையும் இவரையே சாரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் யார்? என்று சன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் தலைசிறந்த சிறுநீரக மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஆனந்த விகடனில் "துப்புரவுத் தொழிற்சாலை" என்ற சிறுநீரக விழிப்புணர்வு என்ற தொடரை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், அமெரிக்கா, லண்டன், ஆஸ்ரேலியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவப் பல்கலைக்கழக கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளார்.