சென்னை:கரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்கள் கடந்த 6 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் உதயகுமார்,”டிஎம்எஸ் கீழ் தங்களை பணியமர்த்தினால் மட்டுமே தங்களுக்குப் பணி பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அமைச்சரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாங்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நியமிக்கப்பட்டதை எடுத்துரைத்தாக செவிலியர்கள் தெரிவித்தனர். ஆனால் தங்களுடைய நியாயமான கருத்துக்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்க மறுத்ததாகக் கூறினார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகக் கூறினார். அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி எனவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் சங்க நிர்வாகிகள் 7 பேருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கரோனா காலத்தில் கடந்த 2020 ஆண்டு 2,570 செவிலியர்கள் மாதம் 14 ஆயிரம் சம்பளம் என ஆறு மாத கால தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற்பொழுது கரோனா பேரிடர் முடிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு டிபிஎச், என்எச்எம், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில் அந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் அவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இட ஒதுக்கீட்டு முறை தங்கள் பணி நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைச் செவிலியர்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்திலிருந்து 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் சொந்த மாவட்டத்தில் பணி வழங்கப்படும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் பணி அறிவிப்பு வெளியிடுகின்ற போது முன்னுரிமை அளிக்கப் பரிந்துரை செய்யப்படும் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசித்து முடிவெடுப்பதாகச் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.