தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NEET: தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர் பிரபஞ்சன் கூறும் ஆலோசனை

என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தை மட்டும் படித்தாலே நீட் தேர்வினை எளிமையாக எதிர்கொள்ளலாம் என நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் கூறி உள்ளார்.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவன் பிரபஞ்சன் பிரத்யேகபேட்டி
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவன் பிரபஞ்சன் பிரத்யேகபேட்டி

By

Published : Jun 14, 2023, 8:00 AM IST

Updated : Jun 14, 2023, 1:27 PM IST

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவன் பிரபஞ்சன் பிரத்யேகபேட்டி

சென்னை:இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி 499 மையங்களில் 4 ஆயிரத்து 97 இடங்களில் நடத்தப்பட்டது. இதில், மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 462 பேர் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்கள் தேர்வினை எழுதினர். 13 மொழிகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வினை ஆங்கில மொழியில் 16 லட்சத்து 72 ஆயிரத்து 914 மாணவர்கள் எழுதி உள்ளனர். தமிழ் மொழியில் 2022 ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதிய நிலையில், 2023ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 536 மாணவர்கள் எழுதி உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 13) வெளியிடப்பட்டன. நீட் தேர்வினை எழுதிய 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்களில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 715 முதல் 117 மதிப்பெண்கள் வரை 8 இலட்சத்து 81 ஆயிரத்து 402 மாணவர்கள் பெற்றிருந்தனர்.

ஆனால், 2023ஆம் ஆண்டு நடைபெற்று வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு முடிவில், 720 மதிப்பெண் முதல் 137 மதிப்பெண்கள் வரை 10 லட்சத்து 14 ஆயிரத்து 372 மாணவர்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டு 99 ஆயிரத்து 610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 57 ஆயிரத்து 215 மாணவர்கள் தகுதி பெற்றனர்.

2023ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி, அதில் 78 ஆயிரத்து 693 பேர் தகுதி பெற்று உள்ளனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வினை எளிய மாணவர்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரை பூர்வீகமாகக் கொண்ட பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்து உள்ளார். மேலும், அதேபோல் ஆந்திராவைச் சார்ந்த போரா வருண் சக்கரவர்த்தி 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்து சாதனை புரிந்து உள்ளனர்.

முதல் 50 தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை பூர்வீகமாகக் கொண்ட ஜெகதீசன் என்பவரின் மகன் பிரபஞ்சன். ஜெகதீசன், விழுப்புரம் மாவட்டம் மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மாணவர் பிரபஞ்சன், செஞ்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்து வந்தார். அப்போதே நீட் தேர்விர்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவில் 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பிரபஞ்சன் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்பொது பேசிய மாணவர் பிரபஞ்சன், “நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அது குறித்து பேச முடியாத அளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளேன்” என்றார்.

மேலும் பேசிய மாணவர், “நீட் தேர்விற்கு எனது பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் அளித்த பயிற்சியும், ஒத்துழைப்பும் தேர்வில் சாதனை புரிய உறுதுணையாக இருந்தது. நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT - National Council of Educational Research and Training) பாட புத்தகத்தினை முழுவதுமாக புரிந்து படிக்க வேண்டும். மேலும், படித்தவற்றை நன்கு பயிற்சி செய்ய வேண்டும். எங்கள் பள்ளியில் பாடங்கள் நடத்தி முடித்த பின்னர், தொடர்ந்து அளித்த பயிற்சியே சாதனை படைப்பதற்கு காரணமாக அமைந்தது.

10ஆம் வகுப்பு வரை செஞ்சியில் உள்ள சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பின்னர், சென்னையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படித்தேன். மாநில பாடத் திட்டத்திற்கும், இந்த பாடத் திட்டத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

நீட் தேர்வில் சில கேள்விகள் மட்டுமே கடினமாக இருந்தது. எனது தாய், தந்தை நான் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். தேவையான பாடப் புத்தகங்களையும் வாங்கித் தந்தனர். எம்பிபிஎஸ் முடித்து விட்டு எம்எஸ் சர்ஜரி படிக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறினார்.

மேலும் இது குறித்து பிரபஞ்சனின் பெரியப்பா நந்தகுமார், தனது தம்பி மகன் இவ்வளவு மதிப்பெண் எடுத்தது கடவுளின் ஆசிதான் எனவும், எதிர்பாராத ஒன்றுதான் எனவும் தெரிவித்தார். அதேபோல் படிப்பிற்காக தனது விளையாட்டு எதையும் விட்டுக் கொடுக்கவில்லை எனவும், கிராம சூழலில் இருந்து விடுபட்டு நகர சூழலில் படிக்க வந்தார் எனவும், இங்கு சூழலுக்கு ஏற்ப இணைந்து விட்டார் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:NEET Exam Results 2023; முதலிடம் பிடித்து தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் சாதனை..!

Last Updated : Jun 14, 2023, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details