இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இந்தியா முழுவதும் ஒரே நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், பிடிவாதமாக வாதிட்டு, தமிழக மாணவர்களுக்கு மறக்க முடியாத மாபெரும் துரோகம் செய்த மத்திய பாஜக அரசு, இப்போது தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு (INI-CET) மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு, தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்களை ஒதுக்கி குழப்பங்களைச் செய்து கொண்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக இரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினாலே போதும் என்று இன்னொரு ஒரு பேதமும், துரோகமும் இழைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையில் - அந்தந்த மாநிலங்களின் தேர்வு முறை நீடிக்கட்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநிலங்கள் குறிப்பாகத் தமிழ்நாடு சார்பில் வாதிடப்பட்ட போதும், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று வீண் பிடிவாதம் செய்து, நீதிமன்றங்களை திசை திருப்பும் வகையில் வாதிட்டது மத்திய அரசு. இதனால் தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் கூட்டணியாக இணைந்து வலுக்கட்டாயமாகத் திணித்தனர்.
இதனால், இதுவரை 13 மாணவர்கள் பலியாகியிருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய இரு மசோதாக்களை, வேண்டுமென்றே கிடப்பில் போட்டு, நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கவே முடியாது என்று அந்த மசோதாக்களை நிராகரித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்விக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை என்றும் கூறினர்.
இன்றைக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்பது ஓர வஞ்சகத்தின் உச்சக்கட்டமாகும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், முதுநிலை மருத்துவக் கனவையும் சுக்கு நூறாக நொறுக்கி எறியும் போக்கு.
மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தனி இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று மத்திய அரசே உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது. மாணவர் சேர்க்கை தகுதி (மெரிட்) அடிப்படையிலேயே நடக்கும் என்று கூறியது மட்டுமின்றி, இட ஒதுக்கீடே அளிக்க முடியாது என்று இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக வாதிட்ட மத்திய அரசு இப்போது தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.