தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் முதுநிலைத் தேர்வு: அந்தந்த மாநிலங்களிலேயே கூடுதல் மையங்கள் அமைக்க கோரிக்கை - எம்பி சு.வெங்கடேசன்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

NEET Masters Examination: Request to set up additional centers in the respective states
NEET Masters Examination: Request to set up additional centers in the respective states

By

Published : Mar 9, 2021, 3:21 PM IST

சென்னை: நீட் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வு மையப் பிரச்சினையில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவுகட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தேசிய தேர்வுக் கழகத்தை வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குநர் பவானிந்திரா லால் மார்ச் 3 அன்று பதில் அளித்திருக்கிறார்.

அதில், நீட் முதுநிலைப் பட்டம் - 2021 தகவல் பகிர்வேடு பிரிவுகள் 7.5 மற்றும் 8.18இல், தேர்வர் விரும்புகிற மாநில மையம் கிடைக்காதபட்சத்தில் தேர்வு மையப் பட்டியலில் வேறு மாநிலம், யூனியன் பிரதேசத்தை தேர்வுசெய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், தேசிய தேர்வுக் கழகம் அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அது முடியாதபட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களின் மையங்களை ஒதுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு கழகத்தின் பதில் கடிதம்

கட்டமைப்பு, நிர்வாக வசதிகளைக் காரணம் காட்டியுள்ள அவர், கரோனா சூழலில் தகுந்த இடைவெளிகளை மேற்கொள்ள தேர்வர்களுக்கு அடுத்த இருக்கைகளை காலியாக விட்டு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதத்திற்கு மீண்டும் பதிலளித்துள்ள எம்பி சு. வெங்கடேசன், "கரோனா சூழலில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், இடர் அற்ற சூழலை தேர்வர்களுக்குத் தர முனையும் உங்கள் அக்கறையைப் பாராட்டுகிறேன். இருப்பினும், அந்தந்த மாநில மையங்களே மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய கூடுதல் மையங்களுக்கான முயற்சிகளை ஏன் எடுக்கவில்லை? என்பது புரியவில்லை.

மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்வதும் தேர்வர்களுக்கு இடரை உருவாக்குமென்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் இறுக்கமாக்கப்பட்டு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் மீண்டும் வலியுறுத்தப்படும் நிலையில் எப்படி இப்பயணங்கள் எளிதாக அமையும்?

நான் இக்கடிதத்தை சர்வதேச மகளிர் நாள் அன்று எழுதுகிறேன். அண்டை மாநில மையங்களில் தேர்வு எழுத பணிப்பது பெண்களையே அதிகம் பாதிக்கும். பெண்களோடு உடன் செல்ல வேண்டிய நிலையில் உள்ள மூத்தவர்கள் நமது அக்கறைக்கு உரியவர்களல்லவா?

சு. வெங்கடேசன் கடிதம்

உங்கள் கடிதத்தில் கொஞ்சம் நம்பிக்கைத் தந்துள்ளீர்கள். முடிந்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே மையங்களை ஒதுக்க முயற்சி செய்வோமென்று கூறியுள்ளீர்கள்.

ஆகவே அதற்குரிய கட்டமைப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒவ்வொரு தேர்வருக்கும் அவர்தம் மாநில மையமே கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details