கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டது. அப்போது, கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலில் அவர் 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு பட்டியலையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்த மாணவன் மனோஜ், தனக்கு குறைத்து மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை தரப்பில், கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மாணவர் தாக்கல் செய்த மதிப்பெண் சான்றின் ஸ்க்ரீன் ஷாட் திரிக்கப்பட்டது என்றும், 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.