தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக்கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திரும்பப் பெறும் மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Neet impersonation case, Chennai HC Questioned to govt

By

Published : Nov 4, 2019, 1:28 PM IST

தனியார் மருத்துவக்கல்லூரியில் என்ஆர்ஐ இடங்களை கவுன்சிலில் மூலம் நிரப்ப உத்தரவிடக்கோரி தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3 ஆயிரத்து 81 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், நீட் பயிற்சி மையங்கள் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும். ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் மருத்துவ படிப்பு அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீதிபதிகள் சாடினர். மேலும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது என தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்துவரும் மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரவித்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்பப் பெற்றுவரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம் மாணவர்களின் கைரேகைகள் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்பதையும் நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் சிபிஐ பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details