திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’நீட் மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை, சதி எண்ணத்துடன் பாழ்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் துரோகத்தை இளைஞர் சமுதாயம் அறவே மன்னிக்காது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்கவே முதலமைச்சர் பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சரும் “கடித நாடகத்தை”அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டுக - ஸ்டாலின் - statement
சென்னை: கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் விலக்கு மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் நீட் தேர்வைக் கொண்டுவந்து, ஏழை, நடுத்தர, கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் மருத்துவக் கனவுகளையும் சிதறடித்துள்ள மத்திய பா.ஜ.க அரசுக்கு அதிமுக அரசு முழுக்க முழுக்க உடந்தையாக இருக்கிறது. நீட் தேர்வு மசோதாக்களுக்கு அனுமதியும் பெறாமல், இதுகுறித்து சட்டப்பேரவையில் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற விவாதங்களின் முழு தகவல்களையும் உயர் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்காமல் உள்நோக்கத்துடன் அதிமுக அரசு செயல்படுகிறது.
கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் விலக்கு மசோதாக்களை நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.