தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு முடிவு வெளியீடு - மாணவர்களுடன் போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Minister Ma Subramanian

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து 104 என்ற உதவி எண் மூலம் மாணவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் மனநிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.

நீட் தேர்வு முடிவு வெளியீடு - மாணவர்களுடன் ஃபோனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு முடிவு வெளியீடு - மாணவர்களுடன் ஃபோனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Nov 3, 2021, 8:05 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் மனநல மருத்துவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நீட் தேர்வு எழுதுவதற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக அச்சமின்றித் தேர்வு எழுதுவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவிற்குப் பின்னரும் மாணவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது.

நீட் ஆலோசனை மையம்

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில் இன்று (நவ.3) 104 கட்டணமில்லா சேவை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவரிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களின் பெற்றோரிடம் பேசினார். மேலும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை குறித்து தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா கூறுகையில், "104 என்ற கட்டணமில்லா தொடர்பு எண் மூலம் நீட் தேர்விற்கு முன்பாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. சுகி சிவம் மூலம் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தேர்வுக்குப் பின் ஆலோசனை

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகின. தேர்வு முடிவிற்குப் பின்னரும் மாணவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு கலந்து கொள்வது, மேலும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. நவம்பர் 2ஆம் தேதி முதல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

சில பெற்றோர் தங்களின் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தனர். பெற்றோருக்கும் ஆலோசனை வழங்குகிறோம். மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான வழிகள் குறித்தும் மருத்துவத்துறையில் இருக்கும் பிற படிப்புகள் குறித்தும் கூறி வருகிறோம்" என்றார்.

பிற படிப்புகளில் உள்ள வாய்ப்புகள்

104 கட்டணமில்லா தொலைபேசி மையத்தில் பணிபுரிந்து வரும் மன நல ஆலோசகர் அருணா கூறும்பொழுது, "நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மன அழுத்தத்தில் இருந்த மாணவர்களுக்கு மாவட்ட மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கினோம்.

தற்போது நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ளதைத் தொடர்ந்து மாணவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம்.

உதவி தேவைப்படும் மாணவர்களுக்குத் தனியாக ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவம் இல்லாமல் பிற படிப்புகளில் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் தெரிவித்து வருகிறோம்" எனக் கூறினார்.

நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு பலமுறை வாய்ப்பு உள்ள நிலையில், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் சோர்ந்து விடாமல் மனஉறுதியுடன் மீண்டும் எதிர்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details