எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு பள்ளிகல்வித் துறை பயிற்சி வழங்கியது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
2018ம் ஆண்டு நடந்த தேர்வுக்கு 9184 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 1391 மாணவர்கள் தகுதி பெற்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 14 ஆயிரத்து 929 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2553 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றனர்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினைஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 132 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 6,692 மாணவர்கள் மட்டுமே தேர்வினை எழுதி உள்ளனர். அவர்களில் 1633 மாணவர்கள் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 4 பேர் மட்டுமே 501 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
400 முதல் 500 வரை 15 மாணவர்களும், 300 முதல் 400 வரை 71 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை.
இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் இ பாக்ஸ் நிறுவனத்தினால் நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு கல்வித் துறை சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சி தேவையான அளவிற்கு கை கொடுக்கவில்லை என்பது கடந்தகால தேர்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே அரசு அளிக்க கூடிய இலவச பயிற்சி திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு முதல் ஸ்பீடு நிறுவனத்தால் இரண்டு ஆண்டுகள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவில்லை. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பறிக்கப்பட்ட பயிற்சியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க கூடிய அளவிற்கு அவர்களால் மதிப்பெண் பெற முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் 100 மாணவர்கள் கூட மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் இருந்து சேர முடியவில்லை.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சியினை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து முதுகலை ஆசிரியர் பாலாஜி சம்பத் கூறும்போது, ''நீட் தேர்வுக்கான பயிற்சி ஜனவரி வரை தள்ளிப் போடாமல் நவம்பரில் தொடங்குவதை வரவேற்கிறேன். இதற்குரிய பாடங்கள் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டியது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கட்டாயம் அரசு கொண்டுவர வேண்டும். இந்த சட்டம் ஆளுநரிடம் இருக்கிறது எனக் கூறாமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அமல்படுத்தினால் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
மாணவர்களுக்கு அதிகளவில் செலவு செய்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. ஆன்லைனிலேயே நீட் தேர்விற்கான வீடியோக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.