சென்னை:இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசுப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மருத்துவம் படிக்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலையளிக்கிறது. மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
அதே நேரத்தில், நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை, அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இந்த இரு நிலைகளுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும் வரை, அந்த தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.
தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி நீட் தேர்வுக்கான பயிற்சி பெறும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதைக் கருத்தில் கொண்டு தான், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. வழக்கமாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நீட் பயிற்சி தொடங்கும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படும்.
தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஓராண்டு முதல் இரு ஆண்டுகள் வரை வழங்கப்படும் நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போதுமானதல்ல. ஆகஸ்ட் மாதம் பயிற்சி வகுப்புகளைத்தொடங்கினாலே அது போதுமானதாக இருக்காது எனும் சூழலில், நவம்பர் மாதம் பிறந்தும்கூட பயிற்சி வகுப்புகளைத்தொடங்கவில்லை என்றால், அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு வெற்றி பெற முடியும்?
கடந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் டிசம்பர் மாதம் வரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. அதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 17 ஆயிரத்து 972 அரசுப்பள்ளி மாணவர்களில் 5,132 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு எழுதிய 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.