சென்னை : டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள ஈட்டி எரியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள்.
ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அவரது சாதனை ஈடு இணையற்றது!” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாநிலங்களவை எம்பி அன்புமணி ராமதாஸ், “தங்க மகனுக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. உங்களது சாதனையால் நாடு பெருமிதம் கொள்கிறது. தடகளத்தில் நீங்கள் பெற்ற வெற்றி நூறு கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் ஹரியானாவின் நீரஜ் சோப்ரா சாதனை படைத்ததுடன், தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : இராணுவ வீரனே.. பாராட்டுகள்.. ராஜ்நாத் சிங்!