இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கை நமக்கு அளித்த கொடையான அலையாத்திக் காடுகளின் (மாங்குரோவ் காடுகள்) பரப்பளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடலோரப் பகுதிகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வனத் துறை சார்பில் செயற்கைக்கோள் மூலம் தமிழ்நாடு வனப்பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 4 சதுர கிமீ அளவுக்கு குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில்தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்திக் காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
முத்துப்பேட்டை கடற்பகுதியில் மட்டும் 11,886 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் இருந்தன. ஆனால், இப்போது அவற்றில் 60 விழுக்காடு காடுகள் அழிந்துவிட்டன. இன்றைய நிலையில் சுமார் 4800 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும்கூட 2000 ஹெக்டேர் (16.8%) காடுகள் மட்டுமே அடர்த்தியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டில் காவிரிப் பாசன மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால்தான் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. முத்துப்பேட்டை பகுதியை ஒட்டிய 22-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவைதான் பாதுகாப்பாக உள்ளன. இந்தக் காடுகள் சீரமைக்கப்படாவிட்டால் இப்பகுதிகள் கடல் சீற்றத்திற்கு ஆளாகக் கூடும்.