சென்னை: மதுரவாயல் அடுத்த நூம்பல் அருகே மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரது மகன் ராஜேஷ் (வயது 25). டிரைவராக வேலை செய்து வந்த ராஜேஷ், சிவரஞ்சனி (வயது 23) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று (நவ. 2) காலை முதல் ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என அக்கம், பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் மதுரவாயல் போலீசார் வந்து கதவை தட்டி பார்த்து உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ராஜேஷ், இறந்த நிலையில் இருப்பதை கண்டு போலீசார் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ், சிவரஞ்சனியை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாகவும், கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணம் செய்து வைத்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் சிவரஞ்சனி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் மனைவியை மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிவரஞ்சனி வர மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஷ் வீட்டில் உள்ள அறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒன்பது நாட்களில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!