சென்னை:குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதனையடுத்து, அவர் நாடுமுழுவதும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், திரௌபதி முர்மு இன்று (ஜூலை.2) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார். சென்னையில் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சென்னை அண்ணா அறிவாலயத்தில் (ஜூன் 30) மாலை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது திமுக மற்றும் கூட்டணித்தலைவர்களிடம் ஆதரவு கேட்டுப்பேசினார்.