சென்னை:தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாகப் பட்டியலின வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹல்தார் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3 நாள்களாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல் துறைத் தலைவருடன் ஆய்வு செய்தேன்.
பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை சந்தித்துப் பேசினேன். தமிழ்நாட்டில் பட்டியலின வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.