சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜெயராமன் சென்னை உயர்நீதமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "எங்கள் கிராமத்தில் உள்ள அருள்மிகு சக்கியம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்றிவிடக் கூடாது என்பதற்காக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தனது நிலத்தை சட்ட விரோதமாக இந்து சமய அறநிலையத்துறை எடுக்க முயற்சிப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
சீனிவாசனின் புகாரை விசாரித்த ஆணையம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சிவில் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதால் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்ததுடன், இதே நிலை தொடரவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று(மார்ச்.23) சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றும், அதனால் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.