டெல்லி :நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்து உள்ளது, கடந்த 2014 ஆம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது 64 சதவீதம் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எண்ணிக்கை 94 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான எண்ணிக்கை 107 சதவீதமும் உயா்ந்து உள்ளது கூறப்பட்டு உள்ளது.
இந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்க வேண்டிய தரநிலை விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்து தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரநிலை விதிமுறைகளை கடைபிடிக்காத நாடு முழுவதும் உள்ள 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போதிய சிசிடிவி கேமிரா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆசிரியா் பட்டியல் உள்பட தேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்துள்ள தரநிலைகளை முறையாக பின்பற்றாத காரணத்திற்காக 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம், குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.