தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள தங்க கடத்தல் விவகாரம்: சென்னையில் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை!

சென்னை: கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக, சென்னையில் கொச்சின் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

nia
nia

By

Published : Aug 1, 2020, 5:27 PM IST

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக, என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அலுவலராகவும் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கக் கடத்தலில் ரமீசுடன் தொடர்புடைய 5 பேரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது தங்க கடத்தல் கும்பலுடன் ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. அவரிடம் ஏற்கனவே, என்ஐஏ அலுவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், தற்போது என்ஐஏ அலுவலர்களின் விசாரணை வளையத்திற்குள்ளும் சிவசங்கரன் உள்ளார்.

இந்த நிலையில், கொச்சின் தேசியப் புலனாய்வு முகமை டிஐஜி கேபி வந்தனா ஐபிஎஸ் தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கடத்தலில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தொடர்பு இருப்பதால், சென்னையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் நிதி திரட்டும் வேலையில் ஈடுபடுவதாக, சென்னை என்ஐஏ அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் தப்பிச் செல்லும் போது தான், களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்டார். எனவே, கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கேரளாவில் தங்க கடத்தல் நடைபெறும் காலத்தில் பணியில் இருந்த சுங்கத்துறை அலுவலர்கள், பணி மாறுதல் பெற்று தமிழ்நாட்டில் பணிபுரிவதால் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தரகர்களுக்கும், கேரள தங்கக் கடத்தலுக்குத் தொடர்பு உள்ளதா எனவும், கொச்சின் என்.ஐ.ஏ அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details