அக்டோபர் 11ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் நாளாக 2012ஆம் ஆண்டு அதே தேதியிலேயே ஐநா அறிவித்தது. அந்தவகையில் ஆண்டுதோறும் அக்டோடபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடுகள் இந்தியாவில் மிகவும் அதிகம். கருவுற்ற தாய்மார்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அதன்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
பெண் கருக்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டன. குடும்பத்தினரால் சுமையாகக் கருதப்படும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதில் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இவ்வாறு பெண் குழந்தைக்கு அளிக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு முடிவே இல்லை.
பாலின விகிதம்
1961ஆம் ஆண்டில், ஆறு வயதுக்குள்பட்ட ஒவ்வொரு 1000 சிறுவருக்கும் 976 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த விகிதம் 2001ஆம் ஆண்டுக்குள் 927ஆகவும், 2011இல் 918ஆகவும் சரிந்தது.
பெண் குழந்தை மீதான சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறை எவ்வாறு ஆபத்தானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பெண் குழந்தையைக் காப்பாற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2015இல் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன் காரணமாக, இந்த விகிதம் 16 புள்ளிகள் அதிகரித்து 934ஆக அதிகரித்துள்ளது. தேசிய பெண் குழந்தைகள் நாளையொட்டி, நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டும் நாட்டின் வளர்ச்சி பெண்கள் கையில்
ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண்கள் என்பது ஆரோக்கியமான விகிதமாக இருந்தாலும், இந்தியா அதை அடைவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. கரோனா காலகட்டத்தின்போது நடந்த ஏராளமான குழந்தைத் திருமணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி உறுதியாகும் சூழலில் மட்டுமே தேசம் நம்பிக்கையுடன் முன்னேற முடியும்.
பெண் குழந்தைக்கு 12 ஆண்டு காலம் தடையற்ற கல்வியை அளிக்கும் கொள்கைகளை சர்வதேச நாடுகள் வகுக்க வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரை செய்திருந்தது. இந்த விவகாரங்களில் பின்தங்கியுள்ள நாடுகள் ஆண்டுக்கு 15 முதல் 30 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உற்பத்தித் திறனை இழந்துவருவதாக 2018ஆம் ஆண்டில் உலக வங்கி எச்சரித்திருந்தது.
இத்தகைய துரதிருஷ்டவசமான நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியமான வளர்ச்சி, கல்வி, குழந்தை திருமண ஒழிப்பு, பெண் சிசுக்கொலை தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதிசெய்யும் கொள்கைகளை நாட்டில் செயல்படுத்தும்போது வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றால் அது மிகையல்ல.
இதையும் படிங்க: தேச ஒற்றுமைக்காக கன்னியாகுமரி - காஷ்மீர் வரை நடைபயணம் செய்யும் மராத்தி நடிகர்!