சென்னை:தேசிய புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழுவானது, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அதில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் ஆண்டு தேர்வை நடத்திடாமல், மாவட்ட - மாநில அளவில் அதிகாரம் பெற்ற ஏதேனும் அமைப்பின் மூலமாக, ஆண்டு தேர்வை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
ஆனால் அத்தேர்வில் மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு தவணைகளாக பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், 2 மொழிப்பாடங்களை பயில வேண்டும் எனவும் அதில் ஒன்று தாய்மொழி அல்லாத இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளர் சதீஷ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தேசியகல்விக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் முதலில் இந்திய மாெழிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 4 விதமான நிலைகள் தேசியக்கல்விக்கொள்களையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைக்கல்வி, ஆயுத்தநிலைக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என உள்ளது. இந்திய மாெழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் இந்திய மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக்கல்வி என்பது பீரிகேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலும், 3, 4, 5ஆம் வகுப்பு ஆரம்பநிலைக் கல்வி என கூறப்படுகிறது. இந்த நிலையிலும் குழந்தைகளை ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழியை படித்து இருக்க வேண்டும். நடுநிலை வகுப்பில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் 3 மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மொழி ஆங்கிலமாகவும், வேறு ஏதாவது 2 மொழிகளையும் படிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மாணவர்கள் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலம், வேறு ஒரு இந்திய மொழி படித்து இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் கோர் சப்ஜெட் எனப்படும் முக்கியப் பாடங்களை படிக்க வேண்டும்.
ஒரு குழந்தை 12 ஆம் வகுப்பு முடிக்கும் ஆங்கிலம் தவிர, வேறு ஏதாவது 2 இந்திய மொழிகளை எழுதுவதற்கும் படிப்பதற்கும் தயராக இருப்பார். தமிழ்நாட்டில் தமிழ் மொழியுடன் ஏதாவது ஒரு இந்திய மாெழியை கற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்திதான் படிக்க வேண்டும் என கூறப்படவில்லை. மொழிகளை பொறுத்தவரையில் வரவேற்க வேண்டிது தான். மாணவர்களுக்கான பாடப்பிரிவுகளை பிரித்து வழங்கி உள்ளனர். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் இருக்க கூடாது. மன அழுத்தம் இல்லாமல் படிப்பதற்கு பருவ முறையில் தேர்வினை கொண்டு வர வேண்டும். ஆண்டிற்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என கூறியுள்ளனர்.
மேலும், பொதுத் தேர்வில் குழந்தை எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ அதனை பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர். 3, 5, 8ஆம் வகுப்பில் தேர்வு வைக்க வேண்டுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் குழந்தைக்கு தேர்வு வைத்து அதில் மாணவர்களை தேர்ச்சி பெற்றாரா? இல்லையா? என்பதை கூறுவதற்கு தேர்வு வைக்கவில்லை. மாணவர்களுக்கு பாடப்புரிதலை தெரிந்துக் கொள்ளும் திறன் இருக்கிறதா? என்பதை தெரிந்துக் கொள்வதற்கு ஏதாவது ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு தேர்வினை நடத்த வேண்டும். அதில் குழந்தை மதிப்பெண் பெற்றாலும் இல்லாவிட்டாலும் குழந்தையை தேர்ச்சி என அறிவித்து விடலாம்.
அந்தப் பள்ளிக்கும், ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் தெரிந்தக் கொள்ளத்தான் வைக்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் அனைவருக்கும் கட்டயாக் கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்ச்சி என்பதை மாற்றம் செய்யவில்லை. குழந்தையின் கற்றல் திறனை தெரிந்துக் கொள்ள வேண்டும் எனத் தான் கூறியுள்ளனர். மாணவர்களை 8 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். 9, 10, 11, 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறாவிட்டால் தேர்ச்சி அளிப்பது இல்லை என்ற நிலை வருகிறது.
சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மொழி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும், திறன்வளர்ப்பதற்கு ஒரு பாடத்தையும், மேலும் மாணவர் விரும்பினால் மாெழிப்பாடத்தையும் கூடுதலாக வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தேசியகல்விக் கொள்கையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு 10 பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளது. மொழியில் ஆங்கிலம் மற்றும் ஏதாவது 2 மாெழிப்பாடங்கள் வைத்துக் கொள்ளலாம். மேலும் பகுதி 2, பகுதி 3, பகுதி 4 என பிரித்துள்ளனர்.