சென்னைகெல்லீஸ் சந்திப்பில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தபோது அதில் இருந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். அவர்களை சோதனையிட்ட காவல்துறையினர் 5 கிராம் கஞ்சா மற்றும் பட்டா கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
காவலர்கள் பணியிடை நீக்கம்:அதன் பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இதில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியை மறைத்து வைத்திருந்த விக்னேஷ் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என தெரியவந்தது.
அதன் பின்னர் திடீரென காவல்நிலையத்தில் விக்னேஷ் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்காவல் படை தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை: இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மேலும் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தர் சமீபத்தில் தமிழ்நாடு வந்து உயிரிழந்த விக்னேஷ் நண்பர் ரமேஷிடம் புழல் சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.