சென்னை : தேசிய அளவில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி கீழப்பாவூர் , வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மாலதி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு தேசிய அளவில் 3வது பரிசு.. மாநகராட்சி மேயர் தகவல்!
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு குடியரசுத் தலைவர் கையால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டுக்கா தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு 50 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல் இந்தியாவில் இருந்து தேர்வுச் செய்யப்பட்டுள்ள 50 ஆசிரியர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த ஆண்டு 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதியானவர்களை தேர்வுச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை :"2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 50 ஆசிரியர்களில், தமிழகத்தில் இருந்து, மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி. மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் இருவருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் எதிர்காலமான மாணவர்களை, தலை சிறந்தவர்களாக உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்" என பதிவிட்டு உள்ளார்.
டிடிவி தினகரன் ட்விட்டரில் வாழ்த்து : "2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: Jailer: தலைவர் படம்னா ஜாக்பாட் தான்... ஜெயிலர் பட வசூல் இவ்வளவா?