சென்னை: 'கைதி', 'மாஸ்டர்' படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாளாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் 'துஷாரா விஜயன்' கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் - வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். ஜி.வி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.