சென்னை: வேப்பேரியில் உள்ள சாலையோர குப்பை தொட்டியில் இருந்து 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்து வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேப்பேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூளை பகுதியில் தனியார் கலை கல்லூரி இயங்கி வருகிறது. அந்த கல்லூரி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று முன்தினம் (செப். 24) சென்னை மாநகராட்சி 58வது வார்டு தூய்மை பணியாளர் பரமேஸ்வரி, கௌரி ஆகியோர் காலையில் வழக்கம் போல் குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், குப்பைத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சாக்கு மூட்டையில் ஒரு பொருள் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த இருவரும் அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் சுமார் மூன்று அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இது குறித்து அவர்களின் உயர் அதிகாரியான தேவதாஸ் என்பவருக்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தேவதாஸ் தூய்மை பணியாளரிடம் இருந்து நடராஜர் சிலையை பெற்றுக்கொண்டு அதனை வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார்.