சென்னை:சென்னை விமான நிலைய சர்வதேச சரக்ககத்திற்கு வெளிநாட்டில் இருந்து சரக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் அமெரிக்கா, ஜெர்மன், நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து ஏராளமான பார்சல்கள் வந்தன. விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்த பார்சல்களை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
அப்போது வெளிநாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலில் உள்ளே பரிசுப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அதை தனியே எடுத்து வைத்தனர். அதோடு பார்சலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். இந்த எண் உபயோகத்தில் இல்லை. இதனால் பார்சலில் உள்ள முகவரியை ஆய்வு செய்தனர். அதுவும் போலியான முகவரி என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்று(பிப்.22) காலை அந்த பார்சலை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை இட்டனர். அதில் பச்சை நிறத்தில் 250 போதை மாத்திரைகள்(MDMA) மற்றும் 75 போதை ஸ்டாம்புகள்(LSD) இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் போதை மாத்திரைகளையும், ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த போதை மாத்திரைகள் மற்றும் ஸ்டாம்புகள் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு எப்படி வந்தது? யார் கடத்தினார்கள்? என்பது தொடர்பாக சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதை மாத்திரைகள் மற்றும் ஸ்டாம்புகள் மிகவும் விலை உயர்ந்தவை என்று தெரிகிறது. ஒரு மாத்திரை ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும், இவற்றை செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருடிய பணத்தை எண்ணுவதற்கு கஷ்டம்.. சாலையில் கொட்டிச்சென்ற சோம்பேறி திருடர்கள்!