சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் தமிழக ஒற்றுமை மேடை சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். மாநாட்டில் பேசிய அவர், “மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும்போது மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதற்கு அதிமுக வாக்களித்து அச்சட்டத்தை நிறைவேற்ற வழிவகுத்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராடுபவர்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆணையின்படி புதுவை சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். சட்டப்பேரவையில் பேசும்போது, இந்த நாடு அனைத்து மக்களை ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக நாடு என மிகத் தெளிவாக கூறினேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுகின்றனர். எங்களுக்கு மதம் பற்றி பிரதமர் மோடி சொல்லித்தர தேவையில்லை.