தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்குநேரி வன்முறைக்கு காரணம் அரசியல் கலாச்சாரமா - தலித் அறிவுசார் இயக்கத்தின் ஆய்வறிக்கை கூறுவது என்ன? - நாங்குநேரி வன்முறைக்கு காரணம் அரசியல் கலாச்சாரமா

Nanguneri Investigation Report by ArivuSaar Iyakkam: சாதிய குற்றங்களை செய்பவர்கள் தங்கள் சாதி அமைப்பு பிரதிநிதிகள் தங்களை காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியத்தில் ஈடுபடுகின்றனர் என தலித் அறிவுசார் இயக்கத்தின் தலைவர் தமிழ் முதல்வன் பேட்டியளித்துள்ளார்.

nanguneri-student-attack-investigation-report-by-arivu-saar-iyakkam
nanguneri-student-attack-investigation-report-by-arivu-saar-iyakkam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 6:32 PM IST

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்திய தலித் அறிவு சார் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அறிவு சார் குழு இயக்கத்தின் தலைவர் தமிழ் முதல்வன் கூறும் போது: எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாமல் முற்றிலும் சமூகப்பற்றுடன் மக்களுடைய பங்களிப்பில் எங்களது இயக்கம் உள்ளது. அந்த அமைப்பின் வழியாக திருநெல்வேலி மாவட்டம் மாணவன் சின்னத்துரை தாக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

நாங்குநேரியில் சின்னதுரை என்ற அப்பாவி மாணவன் தன்னுடைய தகப்பனை இழந்து தாயினுடைய சிறிய வருமானத்தில் படிக்கக்கூடிய மாணவன். அந்த மாணவன் சக மாணவர்களால் சாதி ஆதிக்கத்தை கொண்டு தாக்கப்பட்டு இருக்கிறார். பலரும் இது குறித்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். வீடு புகுந்து அந்த மாணவன் வெட்டப்பட்டதற்கு, அந்த பகுதியில் நிலவும் சாதி கலாச்சாரம் தான் காரணம். அதற்கு எந்த சமுதாயம் எப்படி துணை போயிருக்கிறது என்பது தான் இந்த கள ஆய்வின் நோக்கம். ரத்தக் களரியில் இருக்கும் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆட்டோ கேட்ட போது அவரது சாதியை குறிப்பிட்டு ஆட்டோ வராது என அங்கு உள்ள வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். அந்த அளவுக்கு சாதி வெறி அங்கு ஊறி உள்ளது. நாங்குநேரி முழுவதும் சாதி கலாச்சாரத்தில் மூழ்கி இருக்கிறது.

நாங்குநேரி மக்கள் தொகையில் பெரும்பான்மையாக மறவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக கோனார் சாதியினர் சுமார் 500 குடும்பங்களாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக சுமார் 150 குடும்பங்களாக வசித்து வந்த பறையர் குடும்பங்களில் 50 குடும்பங்கள் சாதி ஆதிக்கம் தாங்க முடியாமல் வெளியேறிவிட தற்போது 100 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். இவ்வாறு நாங்குநேரியில் இதர சமூகங்களை துரத்தி விட்டு அவர்களுடைய இடத்தை பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது.

இப்படி தொடர்ச்சியாக நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில் அரசியல் அதிகாரம் உள்ளதே காரணம். திராவிட இயக்கங்களின் அரசியல் சாதியின் பெயரில் இங்கு செயல்படுகிறது. அங்கு நடைபெறக்கூடிய வன்முறைக்கு அடித்தளமாக இருப்பது அரசியல் கட்சிகள் தான் அரசியல் கலாச்சாரம் தான். இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. சமூக நீதியை கொள்கைகளாக வைத்திருக்கும் திராவிட இயக்கங்கள் அவற்றின் கொள்கைகளை நம்பி வாக்களிக்கும் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கின்றனர். சாதி உணர்வை வாக்குகளாக அறுவடை செய்யும் நோக்கில் அந்தப் பகுதி சாதி பெரும்பான்மையினரை கட்சி நிர்வாகிகளாகவும், வேட்பாளர்களாகவும் நிறுத்துகின்றனர்.

சாதிய குற்றங்களை செய்பவர்கள் தங்கள் சாதி அமைப்பு பிரதிநிதிகள் அல்லது திராவிட கட்சிகளில் இருக்கும் சாதி பிரதிநிதிகள் ஆகியோர் உதவி செய்வார்கள் என்ற தைரியத்தில் தான் செய்கிறார்கள். நாங்குநேரியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை விட ஒரு சாதியினர் மட்டும் அதிகமாக உள்ளனர். அங்கு வன்முறை நடைபெறுவதற்கு அவர்கள் தான் முக்கிய காரணமாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக உள்ளது என்பது தான் இந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது என கூறினார்.

இதையும் படிங்க:நான்காம் வகுப்பு மாணவியை ஆசிரியர் அடித்ததில் மருத்துவமனையில் அனுமதி - துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details