சென்னை: வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில், இன்று (டிச.31) தமிழ்நாடு அரசின் கலைபாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து வழங்கும் ‘நம்ம ஊரு திருவிழா -2023’ தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஓட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழா சென்னையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரிலும், வருகிற ஜனவரி 13 அன்று மாலை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் ஜனவரி 14, 15, 16 மற்றும் 17 ஆகிய 4 நாட்கள் சென்னையில் தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட 16 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் மண்டல தலைமை இடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்பை ஆட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம் தோற்பாவை கூத்து, சேர்வை ஆட்டம், தெம்மாங்கு பாட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் இடம் பெறுகின்றன.