தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினிக்கு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்: நீதிமன்றம் கேள்வி - நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றம் கேள்வி

By

Published : Mar 22, 2022, 6:48 PM IST

சென்னை:ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.

நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சக கைதியான பேரறிவாளன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வழக்கில் முடிவு காணப்பட்ட பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.

தலைமை நீதிபதி முன் விசாரணை

இன்று (மார்ச் 22) இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக கூறி உத்தரவு நகலை சமர்ப்பித்தார்.

நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

நீதிபதி கேள்வி

இதையடுத்து, எந்த மேல் முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஜாமீன் கோர முடியும் என நளினி தரப்புக்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் படி, முன் ஜாமீன் கோரலாம், கைது செய்யப்பட்டால் ஜாமீன் கோரலாம், தண்டிக்கப்பட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கோரலாம். ஆனால் மேல் முறையீட்டு வழக்கு ஏதும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் கோர முடியும் என்றார்.

உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது, உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது என கூறிய தலைமை நீதிபதி, மனுதாரர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டமல்ல எனவும் தெரிவித்தனர். பின்னர், நளினி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மனு மீதான விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details